கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்பை மீறி பிரதமர் வாகனத்தை நோக்கி ஓடிய இளைஞரால் பரபரப்பு !!
பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்தார். தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார். அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிறகு பெங்களூரு வந்த பிரதமர் மோடி கே.ஆர்.புரம்- ஒயிட் ஃபீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் கர்நாடக மாநிலம் தாவனகரே நகரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி சாலை பேரணியில் கலந்துக் கொண்டார். அப்போது மோடியின் வாகன அணி வகுப்பை நோக்கி போலீஸ் பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் ஓடி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார் தடுத்து நிறுத்தினார். அவருக்குப் பின்னால் சிறப்புப் பாதுகாப்புக் குழு கமாண்டோவும் ஓடி தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார் கூறுகையில், “பாதுகாப்பு மீறல் எதுவும் இல்லை. அந்த இளைஞரை சிறப்புப் பாதுகாப்புக் குழு கமாண்டோவால் தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த நபர் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பசவராஜ் கடகி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பிரதமர் மோடியைப் பார்ப்பதற்காக பேருந்தில் தாவங்கேருக்கு வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது” என்றார். கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது இதேபோன்று சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.