இந்தியாவின் முதல் ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் – எங்கு திறக்கப்படுது தெரியுமா? !!
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ரிடெயில் ஸ்டோரை அடுத்த மாதம் திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் தனது இ ஸ்டோர் மூலம் ஆப்பிள் சாதனங்களை அதிகாரப்பூர்வமாக 2020 முதல் விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ஆப்பிள் ஆஃப்லைன் ஸ்டோர்களை திறப்பதில் ஆர்வம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களின் படி, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ரிடெயில் ஸ்டோர் மும்பையில் திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் டெல்லியில் மற்றொரு ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
மும்பையில் திறக்கப்பட இருக்கும் ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் ஜியோ வொர்ல்டு டிரைவ் மாலில் அமைக்கப்படுகிறது. இரண்டாவது ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் திறக்கப்பட இருக்கிறது. மும்பையில் உருவாகும் ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் அளவில் பெரியதாக இருக்கும் என்றும் இது சுமார் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. டெல்லியில் திறக்கப்படவுள்ள ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஸ்டோர்களுக்கான இறுதிக்கட்ட பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ரிடெயில் மற்றும் பொது மக்கள் பிரிவுக்கான துணை தலைவர் டியர்ட் ஒ பிரைன் ஆப்பிள் ரிடெயில் ஸ்டோர் திறப்பு விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக பலமுறை டிம் குக் இந்தியாவுக்கு வந்துள்ளார். 2016 வாக்கில் இந்தியா வந்திருந்த ஆப்பிள் சிஇஒ டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருக்கிறார். இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.