பிக்சல் ஃபோல்டு விலை இவ்வளவு குறைவா? இணையத்தில் வெளியான புது தகவல்!
கூகுள் நிறுவனம் தனது சொந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது. பிரபல டிப்ஸ்டரான யோகேஷ் பிரர் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை 1300-இல் தொடங்கி 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 421 முதல் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 947) வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 விலையை விட 500 டாலர்கள் வரை குறைவாகவே இருக்கும். கேலக்ஸி Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் சாம்சங் அறிமுகம் செய்த கடைசி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் மிட் ரேன்ஜ் பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை கூகுள் IO 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி வருகிறது. 2023 கூகுள் IO நிகழ்வு இந்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் விலை 450 டாலர்களில் துவங்கி 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 188 என துவங்கி அதிகபட்சம் ரூ. 41 ஆயிரத்து 320 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடலின் விலையும் இதேபோன்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.