ஆந்திராவை கலக்கிய கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ.2 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்!!
சித்தூர் மாவட்டத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. கடந்த டிசம்பர் மாதம் எஸ்.ஆர்.புரத்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல் பீரோவை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டிற்குள் நிறுத்தி இருந்த காரை திருடிக் கொண்டு சென்றனர். காரின் நம்பர் பிளேட்டை மாற்றி தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பலமனேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பி ஓடினர். கொள்ளை கும்பலை பிடிக்க சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு ரிஷாந்த் ரெட்டி உத்தரவிட்டார். பலமனேரு டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 7 பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 1.80 கிலோ தங்க நகைகள், 6.50 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 3 கார்கள், 6 பைக் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் (35), அவரது மைத்துனர் சுதாகர் (33), அரவிந்த் (24), கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்திர பிரகாஷ் (33), திருவண்ணாமலையை சேர்ந்த கலைச்செல்வன் (37), சிவன் (45), குப்பத்தை சேர்ந்த சின்னசாமி (57) என தெரிய வந்தது. சிவன் மீது 5 கொலை வழக்குகளும், மற்றவர்களின் மீது தமிழகத்தில் 20 முதல் 50 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் மற்றும் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கவைர நகைகளை திருடி உள்ளனர். அதனை விற்ற பணத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் நிலங்களை வாங்கி உள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கிய நிலத்தின் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து ஈரோடு போலீசில் ஒப்படைத்தனர். கொள்ளை கும்பலிடம் இருந்து மொத்தம் ரூ.2 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.