காஷ்மீரில் அமைக்கப்படும் உலகின் உயரமான ரெயில்வே பாலம்: மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது !!
இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரில், ரியாசி மாவட்டத்தின் கத்ரா மற்றும் ரியாசி நகரங்களை செனாப் நதி பிரிக்கிறது. எனவே இந்த இரு பகுதிகளையும் இணைக்க வடக்கு ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி நாட்டிலேயே முதல் முறையாக செனாப் நதியின் குறுக்கே கேபிள் மூலம் இணைக்கும் ரெயில்வே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இமயமலையில் இந்த பாலம் அமையவிருந்ததால் முதலில் இப்பகுதியின் நில அதிர்வு உள்ளிட்ட பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கடந்த 2018-ல் இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 193 மீட்டர் உயரம் மற்றும் 725.5 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான இந்த கேபிள் பாலம் அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
எனவே வருகிற மே மாதத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். மேலும் இது பயன்பாட்டுக்கு வரும்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரெயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இது குறித்து வடக்கு ரெயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், `120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என கணிக்கப்பட்டுள்ள இந்த பாலம் 40 கிலோ வெடி பொருட்கள் வெடிப்பையும் தாங்கக்கூடிய திறன் கொண்டதாக அமைகிறது.
எனவே இதில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட உள்ளது. மேலும் மணிக்கு 213 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றையும் இது எதிர்கொள்ளும். அது மட்டுமின்றி இதில் ஏராளமான சென்சார்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும்’ என தெரிவித்தனர். 28 ஆயிரம் டன் இரும்பு கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள இந்த பாலம் ரூ.1,486 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.