திருவனந்தபுரம் பழஞ்சிறை தேவி கோவிலில் பொங்கல் திருவிழா நாளை தொடங்குகிறது!!
திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இப்பிறவியிலேயே துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதி கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய சக்தி சொரூபினியான பார்வதிதேவி. உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத இறுதியில் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலும் பொங்கல் விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும். 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதன்படி நாளை காலை 9.20 மணிக்கு தேவியை பாட்டுபாடி காப்புகட்டி குடியிருத்தி விழா தொடங்குகிறது.
மாலை 6.30 மணிக்கு கேரள கல்வித்துறை மந்திரி வி.சிவன் குட்டி கலாசார கலை விழாவை தொடங்கி வைக்கிறார். திருவிழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, கணபதி ஹோமம், திரவ்யகலசாபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் பஞ்சாலங்கார பூஜை, புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெறுகிறது. 7-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி காலை வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு பகல் 11.25 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது.
தொடர்ந்து மதியம் 1 மணி முதல் தாலப்பொலி உருள் நேர்ச்சை, மதியம் 2.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம், மாலை 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 6.45 மணிக்கு பஞ்ச அலங்கார பூஜை, 7.20 மணிக்கு குத்தியோட்டம், சுருள் குத்து, இரவு 10.35 மணிக்கு யானை மீது தேவி பவனி வருதல், 4-ந்தேதி இரவு 7.25 மணிக்கு காப்பு அவிழ்ப்பு, 12 மணிக்கு குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மோகன்தாஸ், செயலாளர் விஜயன், துணை தலைவர் சந்திர சேனன், இணை செயலாளர் விஜயகுமார் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.