செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது!!
செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க மத்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ரெயில் வரும் ஏப்ரல் 8-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. ரெயிலின் வழித்தடம், பயண நேரம், நிறுத்தப்பட வேண்டிய ரெயில் நிலையங்கள் மற்றும் கட்டணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தெற்கு மத்திய ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்-திருப்பதி இடையே நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையில் வந்தே பாரத் ரெயிலை இயக்க தென் மத்திய ரெயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முறையான முடிவு எடுத்த பிறகு இந்த ரெயில் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தெலுங்கு மாநிலங்களுக்கு இடையே 3 ரெயில்களை அறிமுகப்படுத்த ரெயில்வே அமைச்சகம் முன்பு முடிவு செய்தது. செகந்திராபாத்-விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரெயிலுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தினசரி 100 சதவீத இருக்கைகள் நிரம்பியவாறு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு மாநிலத்திற்கு ஒரு வந்தே பாரத் ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆந்திரா- தெலுங்கானா இடையே 2-வது வந்தே பாரத் ரெயிலை இயக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.