;
Athirady Tamil News

ஒரே மையத்தில் 700 பேர் தேர்ச்சி: டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்- எடப்பாடி பழனிசாமி!!

0

தமிழக சட்ட சபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறை கேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பேசினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நில அளவையர் மற்றும் குரூப்-2 தேர்வுகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 29 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தி கலந்தாய்வுகளையும் முடித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட தனியார் மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இதுபோன்ற குழப்பங்கள் தொடர்ந்து நடக்கிறது. எனவே தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த அரசை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு இதே பிரச்சினையை எழுப்ப சட்டமன்ற உறுப்பினர்கள் வேல் முருகன், நாகை மாலி ஆகியோரும் அனுமதி கேட்டு இருந்தனர்.

எனவே அவர்களும் அரசின் கவனத்தை ஈர்க்க ஒரு நிமிடம் பேச கேட்டுக் கொள்கிறேன் என்றார். வேல்முருகன்:-அ.தி.மு.க. ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வை வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும், அண்டை நாட்டை சேர்ந்த சிலரும் எழுதலாம் என்று கொண்டுவரப் பட்டதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்றார். இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரை முருகன், ‘உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினால் அதற்கு சம்பந்தப்பட்டவர் கள் பதில் தெரிவிக்க வேண்டுமே தவிர இது போன்று எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றார். இதைத்தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு ‘உறுப்பினர் வேல்முருகன் அப்போது (அ.தி.மு.க.) ஆட்சியில் நடந்ததாகத்தான் குறிப்பிட்டு பேசுகிறார். அதில் குற்றச்சாட்டு இருப்பதாக தெரியவில்லை’ என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது என்று குறிப்பிட்டு சில வார்த்தைகளை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘எதிர்க்கட்சி தலைவர் ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்தி சில வார்த்தைகளை கூறி இருக்கிறார். அந்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் ‘ என்றார். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அந்த வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து எழுந்து பேசிய வேல் முருகன் எம்.எல்.ஏ., அ.தி. மு.க.வினரை பார்த்து கார சாரமாக கையை உயர்த்தியபடி பேசினார். அதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. வினரும் பேசியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், வேல் முருகனை பார்த்து நேரடியாக இப்படி பேசக்கூடாது. நீங்கள் அமருங்கள்’ என்றார்.

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்டு எம்.எல்.ஏ. நாகை மாலி, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அவர் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விளக்கத்தை பின்னர் தான் தெரிவிக்க முடியும். தற்போது என்னிடம் ஓரளவு பதில் உள்ளது. அதை இந்த அவைக்கு தெரிவிக்கிறேன். குறிப்பிட்ட சில மையங்களை சேர்ந்தவர்கள் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் சிலரிடம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.யில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். உதாரணத்துக்கு ஒன்றை சொல்கிறேன். என்னிடம் ஒரு கோப்பு வந்துள்ளது. அதில் 7 ஆயிரம் பேரை தேர்வு செய்ய 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், அந்த தேர்வை நடத்த ரூ.42 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நான் இது ஏற்புடையதல்ல என்று அதிகாரிகளிடம் தெரிவித்தேன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அரசே சில சீர்திருத்தங்களை செய்ய உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.