பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி- மனைவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டல்!!
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 46). பனியன் நிறுவன உரிமையாளர். இவர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கும் சென்னையை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவருக்கும் 15வருடம் பழக்கம். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கும் என் மனைவிக்கும் அவ்வப்போது சிறு சிறு குடும்ப பிரச்சனைகள் இருந்து வந்தது. எனது மனைவி என்னை பிரிந்து எனது பாட்டி வீடான அவிநாசிபாளையம் தோட்டத்தில் பாட்டி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். 2016ம் ஆண்டு என்னுடைய கட்டிடம் ஒன்றை விற்பனை செய்து 60 லட்சம் ரூபாய் ரொக்கமாக கையில் வைத்திருந்தேன். என் மனைவியுடன் என்னை சேர்த்து வைக்க கிருஷ்ணராஜ் அவ்வப்போது தோட்டத்திற்கு சென்று எனது பாட்டியுடனும் எனது மனைவியுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். பின்பு என்னிடம் பேசிய கிருஷ்ணராஜ், உங்களதுதோட்டத்திற்கு நான் சென்ற பொழுது எனக்கு ஒரு வைப்ரேஷன் வந்தது. உங்கள் தோட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் உள்ளது.
அந்தபுதையலை சில பூஜைகள் செய்தால் எடுக்கலாம். மேலும் தோட்டத்தில் புதையல் உள்ளவரை நீயும் உன் மனைவியும் சேர்ந்து வாழ முடியாது. அந்த புதையலை எடுத்துவிட்டால் நீயும் உன் மனைவியும் கடைசி வரை வாழலாம். யாரும் உங்களை பிரிக்க முடியாது என்று கூறினார். இதனை நான் உண்மை என்று நம்பினேன். இதையடுத்து கிருஷ்ணராஜ், புதையல் எடுப்பதற்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் புதையலையும் எடுக்க வில்லை. என் மனைவியுடன் என்னை சேர்த்தும் வைக்கவில்லை. இது சம்பந்தமாக நான் பலமுறை கிருஷ்ணராஜை தொடர்பு கொண்டபோது பணத்தை எல்லாம் உனக்கு திருப்பித் தர முடியாது.
உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டுகிறார். மேலும் என்னுடைய மனைவி வேறொருவருடன் தகாத உறவில் இருப்பதாக வீடியோ ஒன்றை மார்பிங் செய்து என்னிடம் காண்பித்தார். அதிர்ச்சி அடைந்த நான் ஏன் இப்படி செய்தாய் என்று கிருஷ்ணராஜிடம் கேட்டபோது நான் அப்படித்தான் செய்வேன். உன் குடும்பம் பாரம்பரியமான குடும்பம். நீ என்னிடம் கொடுத்த 25 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.