மெஸ்சியை எனக்கு பிடிக்காது: விடைத்தாளில் பதிலளிக்க மறுத்த 4-ம் வகுப்பு மாணவி!!
ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு பகுதியில் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அதுபோல் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தனித்தனியே, ரசிகர்கள், ரசிகைகள் இருப்பார்கள். அந்த வகையில் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின்போது கேரளா முழுவதும் பொதுமக்கள் விழாக்கோலம் பூண்டு, கொண்டாடினர். இந்த நிலையில் தேர்வில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி குறித்த கேள்விக்கு கேரள மாணவி அளித்த பதில், இணையதளத்தையே கலக்கி வருகிறது. கேரள மாநிலத்தில் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இதில் 4-ம் வகுப்பு மலையாள மொழித்தேர்வில், ‘அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஹீரோ லியோனல் மெஸ்சியின் வாழ்க்கை வரலாற்று குறிப்பை எழுதவும்’ என 5 மதிப்பெண் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்தக் கேள்விக்கு மலப்புரம் மாவட்டம், திரூர் புதுப்பள்ளி சாஸ்தா ஏ.எல்.பி. பள்ளி மாணவி ரிசா பாத்திமா இவ்வாறு பதில் எழுதினார். ‘நான் பிரேசில் அணியின் ரசிகை. எனக்கு நெய்மரைத்தான் பிடிக்கும். மெஸ்சியை பிடிக்காது. எனவே இந்த கேள்விக்கு நான் பதில் எழுத மாட்டேன்’ என எழுதி இருந்தார். இந்த விடைத்தாளை ஆசிரியர் ஒருவர் போட்டோ எடுத்து பள்ளி வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த விடைத்தாள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதுபரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்வில் 6 கேள்விகளில் 5 கேள்விகளுக்கு விடை எழுதினால் போதும் என வினாத்தாளில் கூறப்பட்டிருந்தது. இதனால் முதலில் 5 கேள்விகளுக்கு விடை எழுதிய மாணவி கடைசியாக `மெஸ்சியை எனக்கு பிடிக்காது’ என்று எழுதியிருந்தார். இதுகுறித்து ரிசா பாத்திமா கூறியதாவது:- அந்தக் கேள்வியை பார்த்தவுடன் பதிலளிக்காமல் விட்டுவிடலாம் என நினைத்தேன். எனக்கு மெஸ்சியைப் பிடிக்காது என்பதை பதிவு செய்ய வேண்டும் எனவும், மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கூற வேண்டும் எனவும் தோன்றியதால் அந்தப் பதிலை எழுதினேன். கால்பந்து விளையாட்டைப் பற்றி தெரியாத குழந்தை பருவம் முதலே எனக்கு நெய்மரைத்தான் பிடிக்கும். அது ஏன் என்று எனக்குத் தெரியாது.
நான் 3-ம் வகுப்பு படிக்கும் போது கால்பந்து விளையாட்டுபற்றி தெரிந்த பிறகு நெய்மரை இன்னும் கூடுதலாகப் பிடித்தது. சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த உலக கால்பந்து போட்டிகளில் நெய்மர் விளையாடும்போது மட்டுமே பார்ப்பேன். அர்ஜென்டினா விளையாட்டை கொஞ்சம்கூட பார்க்கவே இல்லை. நெய்மரின் பிரேசில் அணி தோல்வியடைந்தபோது வருத்தப்பட்டேன். இனி வரும் போட்டியில் உலகக் கோப்பையை பிரேசில் அணி வெல்லும். இவ்வாறு ரிசா பாத்திமா கூறினார்.