ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் கர்நாடக பாஜக எம்எல்ஏ கைது! !!
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மடல் விருபக்ஷப்பா பெற்றிருந்த முன்ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி மடல் விருபக்ஷப்பாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஒப்பந்தம் வழங்க மடல் விருபக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் ரூ. 40 லட்சத்தை லஞ்சமாக வாங்கும் போது கையும் களவுமாக சிக்கினார். கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட் (கே.எஸ்.டி.எல்.) தலைவராகவும் இருந்த வந்த மடல் விருபக்ஷப்பா மகன் லஞ்சம் வாங்கி சிக்கியதை அடுத்து, தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
கே.எஸ்.டி.எல். நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர் தனது மகன் மூலம் லஞ்சம் பெற முயற்சித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 8 கோடியே 23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி கே நடராஜன் சன்னகிரி சட்டமன்ற உறுப்பினர் விருபக்ஷப்பாவின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒப்பந்தம் வழங்க மொத்தத்தில் ரூ. 81 லட்சம் வரை லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்காக ரூ. 40 லட்சம் முன்பணமாக கேட்டிருக்கிறார். இதனை தனது அலுவலகத்தில் வைத்து பெறும் போதே சிக்கினார்.