;
Athirady Tamil News

ஒரு கிலோ அரிசி ரூ.335, ஒரு கிலோ ஆப்பிள் ரூ. 340 : பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு… மக்கள் கடும் அவதி!!

0

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் சிக்கி 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 20 லட்சம் வீடுகளை இழந்தனர். இந்த சூழலில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களால் அந்நாட்டு மக்கள் பரிதாப நிலையில் உள்ளனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை ஆகியவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ அரிசி விலை ரூ.70-ல் இருந்து ரூ.335 ஆக உயர்ந்து. மேலும் பழங்களின் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. இனிப்பு ஆரஞ்சு ஒரு டஜன் ரூ.440, ஆரஞ்சு ஒரு டஜன் ரூ.400, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.300 என விலை உயர்ந்து உள்ளது. மாதுளை பழம் ஒரு கிலோ ரூ.440, ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.340, கொய்யா பழம் ஒரு கிலோ ரூ.350, ஸ்டிராபெர்ரி பழம் ஒரு கிலோ ரூ.280 என விலை உயர்ந்து காணப்படுகிறது. இதேபோன்று, இறைச்சி விலையும் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு கிலோ ரூ.700 என இருந்த இறைச்சி விலை ரூ.1,000 வரை உயர்ந்து உள்ளது. மட்டன் விலையும் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 வரை அதிகரித்துள்ளது.

பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் கடந்த 2022ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளால் பாகிஸ்தானில் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது. இதற்காக சிடிஎம்பி எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து சர்வதேச நாணய நிதியத்திடம் அனுப்பியது. ஆனால் அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.