ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகள் கொள்ளை:முறைப்பாட்டில் சந்தேகம் !!
வாத்துவ சுற்றுலா விடுதி உரிமையாளரும் செல்வந்த தொழிலதிபருமான ஒருவரின் பன்னிபிட்டிய தென்னந்தோப்பில் மூடியிருந்த வீட்டிற்குள் நுழைந்த ஒரு குழுவினர் அறையினுள் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் வெளிநாட்டு மதுபானங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று தமக்குக் கிடைத்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களில் தங்க சங்கிலிகள், வளையல்கள், கைச்சங்கிலிகள் ,பெறுமதியான கைக்கடிகாரம் உட்பட திருடப்பட்ட தங்கப் பொருட்கள் 102 பவுண்கள் எடையுள்ளவை எனவும் , 300 அமெரிக்க டொலர் பெறுமதியான 40 வெளிநாட்டு மதுபான போத்தல்கள்களும் திருடப்பட்டுள்ளதாக வர்த்தகர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் நுகேகொடையிலுள்ள வீட்டில் தங்கியிருந்ததாகவும் பன்னிப்பிட்டியவிலுள்ள இல்லம் 2 மாதங்களாக மூடியிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பன்னிபிடிய வீட்டின் பிரதான நுழைவாயிலின் திறப்பு உரிமையாளரான வர்த்தகரிடமும் பிற திறப்புகள் இரண்டு வீட்டுப் பணியாளரிடம் இருந்ததாகவும், அந்த பணியாளர் 13 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை வீட்டில் தங்கியிருந்து வீட்டு புற பகுதிகளை சுத்தம் செய்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவருகிறது.
யாரும் இல்லாத மூடிய வீட்டில் இவ்வளவு தங்க நகைகளும் வெளிநாட்டு மதுப் போத்தல்களும் இருந்ததாக வர்த்தகர் அளித்த முறைப்பாட்டில் சந்தேகம் இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.