பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் – எம் ஏ சுமந்திரன்!!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது.ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.
மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக. தற்போதைய ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத தடுப்புசட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. அது மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
2018 ம்ஆண்டு குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள்.இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல. இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது
தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நடந்த அத்துமீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறல்களை கூறுவது எல்லாவற்றையும் இருப்பதையும் விட மோசமாக கொண்டு வரப்படுகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கிறோம் அதனை நிராகரிக்கின்றோம் அதற்கு எதிரான சட்டநடவடிக்கை எடுப்போம்.
அதற்கு மேலாக புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அது முதலிலே பொது அமைப்புகளோடு பேசி இணங்கப்பட வேண்டிய விடயம்.ஆனால் இதில் இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். பயங்கரவாத தடுப்புசட்டம் நீக்கப்படல் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு ஏற்கனவே சென்ற வருடம் ஒரு சிபார்சினை முன் வைத்திருக்கின்றது.
அதாவது பயங்கரவாதத்திற்கான ஒரு விசேட சட்டம் தேவையில்லை என்று. எனவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் அரசாங்கம் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம் குறிப்பாக அரசாங்கமானது தான் செல்லுகின்ற பாதை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதை அறியும்.
தேர்தல்கள் நடத்தப்படாமல் ஜனநாயக பாதையில் இருந்து அரசாங்கம் விலகி மாகாண சபை தேர்தலை பலகாலம் முடக்கி வைத்து தற்பொழுது உள்ளூராட்சி சபை தேர்தலையும் அறிவிக்கப்பட்ட பிறகு கூட அதனை நடத்தாது நிதி நிலைமையை காரணம் காட்டி நாட்டில் ஒரே ஒரு நபர் தடுத்து வைத்திருக்கின்றார் .
இந்த செய்கையின் மூலமாக இது ஒரு ஜனநாயக ஆட்சி முறை இல்லை ஒரு தனி மனித சர்வாதிகார ஆட்சி நாட்டிலே நடக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கின்றது.
ஆகையினால் இந்த மோசமான சூழலிலே இப்படியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒரு விசேட சட்டத்தை கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்குமான செயற்பாட்டிலே அரசாங்கம் இறங்கி இருக்கின்றது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஈடுபடுவோம் என்றார்.