பசுமை முதலீடுகளை அணிதிரட்ட தயார் !!
வலுசக்தி துறைக்குள் பசுமை முதலீடுகளை அணிதிரட்ட இலங்கை தயாராகவிருப்பதாகவும் அதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீ்ட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற இலங்கை பசுமை வலுசக்தி மாநாடு – 2023 இன் தலைவர் என்ற வகையில் ஆரம்ப உரையை நிகழ்த்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் வலுசக்தி துறையில் பசுமை வலுசக்தி முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கு முதலீட்டாளர்களுக்கு இந்த மாநாடு பெரும் வாய்ப்பாக அமையுமென சுட்டிக்காட்டிய ருவன் விஜேவர்தன, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அணிதிரட்டும் போது தனியார் துறையின் அவசியம் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
இலங்கை பெரிஸ் சமவாயத்தை விடவும் குறைந்த மட்டத்தில் “கார்பன் டயொக்சைட்” உமிழ்வு முகாமைத்துவத்துவச் செயற்பாடுகளில் உயர் மனிதவள மேம்பாட்டை பெற்றுக்கொண்டுள்ள நாடு என்பதும் அரிய உதாரணமெனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல் பெரிஸ் சமவாய பங்காளர் என்ற வகையில் இலங்கை 2030 ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 14.5% ஆக மட்டுப்படுத்துவதற்கு அர்பணிப்புடன் செயற்படுவதாக சுட்டிக்காட்டினார்.
2030 ஆம் ஆண்டில் 70% ஆன மின்சார தேவைகளை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியூடாக பூர்த்தி செய்துகொள்ளவும் 2050 மின்சார உற்பத்தியின் போது கார்பன் மத்தியஸ்த இலக்குகளை அடைதல், நிலக்கரி மின் உற்பத்தியை இனிமேலும் பயன்படுத்தாதிருப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் ஹெரிக் லொச்ஹெய்ம், பசுமை வாய்ப்புக்கள் ஊடாக தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.
இன்று வேகமாக அபிவிருத்தி கண்டுவரும் இரு நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பசுமை மாற்றத்தின் தலைமைத்துவத்தை வழங்குவதாக எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டினார்.
அந்த நாடுகள் அபிவிருத்தியை போன்றே பொருளாதார சந்தைகளை கைப்பற்ற எதிர்பார்ப்பதால் சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணிவரும் இலங்கைக்கு பசுமை பொருளாதாரத்திற்கு நுழைவற்கு பெருமளவான வாய்ப்பு உள்ளதெனவும் வலியுறுத்தினார்.
இங்கு கருத்து தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, துறைசார் அமைச்சர் என்ற வகையில் தான் உலக அளவில் இலங்கையை போட்டித்தன்மை மிக்கதாக மாற்றியமைப்பதற்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் அநேகமான அரச நிறுவனங்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், அவற்றின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகள் மற்றும் பிரிவுகள் ஆகிய மூன்றிலும் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
தனது நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக இருப்பது இதற்கு அவசியமான நிறுவன ரீதியான கட்டமைப்பை வடிவமைப்பதேயாகும் என தெரிவித்த காஞ்சன விஜேசேகர , இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதே ஒரே நோக்கம் என சிலர் சுட்டிக்காட்டினாலும், உண்மையில் இது அதற்கும் அப்பாற்பட்ட பரந்தளவான வேலைத்திட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது காணப்படுகின்ற நிறுவன ரீதியான கட்டமைப்பிலிருந்து மீண்டு எதிர்காலத்துக்கு அவசியமான வலுசக்தி திட்டமொன்றை தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.