உலகில் மகிழ்ச்சியே இல்லாத நாடுகள் எவை தெரியுமா…! பட்டியலிட்ட ஐ.நா !!
அளவுக்கு அதிகமான வளங்கள் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லாத 10 நாடுகளின் பட்டியல் அறிக்கை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் (UN) சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் (Sustainable Development Solutions Network) எனும் அமைப்பால் 2012 முதல் ஆண்டுதோறும் மார்ச் 20-ஆம் திகதி சர்வதேச மகிழ்ச்சி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடமிருந்து உலகளாவிய மகிழ்ச்சி அடிப்படையிலான கணக்கெடுப்புத் தரவு வரிசைப்படுத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2023), 137 நாடுகளை வரிசைப்படுத்தி அறிக்கை வெளியானது.
இந்த அறிக்கையில் சமூக ஆதரவு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை என மகிழ்ச்சியை அளவிடுவதற்கு ஆறு முக்கிய காரணிகளைப் பயன்படுத்தி நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் பின்லாந்து (Finland) முதல் இடம் பிரித்துள்ளது. அதேவேளை, பட்டியலில் இலங்கை 112 ஆவது இடத்தையும் இந்தியா 125 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்நிலையில், இந்த பட்டியலில் கடைசி 10 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள், அதாவது மிகக்குறைந்த அளவில் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் எவை என்பதைப் பார்ப்போம்.
மகிழ்ச்சி அறிக்கையில் கடைசியாக இருக்கும் நாடு ஆப்கானிஸ்தான். தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எக்கச்சக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தீவிர சட்டங்கள் என்று மக்களை அச்சுறுத்தும் பல நிகழ்வுகள் இங்கு அரங்கேறியுள்ளன. வெறும் 1.85 புள்ளிகள் பெற்று மக்களின் திருப்தியின்மையுடன் ஆப்கானிஸ்தான் 137-வது இடத்தில் உள்ளது.
இரண்டாவது நாடு
ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக 136-வது இடத்தில் மத்திய கிழக்கு நாடான லெபனான் (Lebanon) இடம்பெற்றுள்ளது. 10 மதிப்பெண் கொண்ட அளவுகோலில் வெறும் 2.39 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது. பசி, பஞ்சம், வறுமை, மனித கடத்தல், போராட்டங்கள் என என பல துயரங்களில் இந்த நாடு இருந்து வருகிறது.
மூன்றாவது நாடு
மேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சியரா லியோன் (Sierra Leone) டைட்டானியம், பாக்சைட், தங்கம் போன்ற தாதுக்களின் முக்கிய உற்பத்தியாளராகவும், முதல் பத்து வைர உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஆனால் கடுமையான விதிமுறைகள், அரசாங்க ஊழல், பாலின அடிப்படையிலான வன்முறை, பெண் பிறப்புறுப்பு சிதைப்பு போன்ற காரணங்களால் மகிழ்ச்சியற்ற நாடாக 135-வது இடத்தில் உள்ளது.
நான்காவது நாடு
அடுத்தபடியாக 134-வது இடத்தில் இருப்பதும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுதான். 230% என்ற உலகிலேயே அதிக பணவீக்க விகிதம் கொண்ட நாடாக ஜிம்பாப்வே (Zimbabwe) மகிழ்ச்சி இல்லாத நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஆனால் இதே நாட்டில் தான் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா நீர்வீழ்ச்சி மற்றும் அளவின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியான கரிபா ஏரி உள்ளன.
ஐந்தாவது நாடு
அடுத்து வருவதும் ஒரு ஆப்பிரிக்க நாடு தான். 133-வது இடத்தில் இருப்பது காங்கோ ஜனநாயக குடியரசு (Democratic Republic of Congo) ஆகும். இங்கு கோபால்ட் மற்றும் தாமிரம், நீர்மின் திறன், மகத்தான பல்லுயிர் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு போன்ற செல்வங்கள் உள்ளன. ஆனால், ஆப்பிரிக்காவில் உள்ள ஏழ்மையான நாடுகளில் இதுவும் ஒன்றாகும். கிட்டத்தட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்கும் குறைவான பணம் வைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.
ஆறாவது நாடு
பட்டியலில் 132-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க பகுதியில் உள்ள போட்ஸ்வானா (Botswana) என்ற நாடு உள்ளது. 3.2 புள்ளிகளுடன் இருக்கும் போட்ஸ்வானா மகிழ்ச்சியற்ற நாடாக 6-வது இடத்தில் உள்ளது என்று கூறலாம். இருப்பினும், ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது போட்ஸ்வானாவில் குற்ற விகிதம் குறைவு.
ஏழாவது நாடு
அடுத்ததாக 131-வது இடத்தில உள்ள நாடு மலாவி (Malawi) . பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செய்த போதிலும் இந்த ஆப்பிரிக்க நாடு உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. இது விவசாயத்தை பெரிதும் சார்ந்துள்ளது. மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானோர் இதில் வேலை செய்கிறார்கள். அதனால் சிறிய அளவிலான விளைச்சல் மாறுபாடு கூட நாட்டை உலுக்கிவிடக்கூடியதாக உள்ளது.
எட்டாவது நாடு
தென்கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள கொமரோஸ் (Comoros) 3.54 புள்ளிகள் பெற்று மகிழ்ச்சி பட்டியலில் 130-வது இடத்தில் உள்ளது. அதிகப்படியான அரசியல் சிக்கல்களை சந்தித்து வருவதால் இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மக்களை பாரிய அளவில் பாதிக்கின்றன.
ஒன்பதாவது நாடு
அடுத்து வருவதும் தான்சானியா (Tanzania) எனும் ஆப்பிரிக்க நாடு தான். தான்சானியா ஆப்பிரிக்காவில் 13-வது பாரிய நாடு மற்றும் பரப்பளவில் உலகின் 31-வது பாரிய நாடு. கிளிமஞ்சாரோ மலை, சிம்பன்ஸி குரங்குகள் அதிகம் காணப்படும் தான்சானியா 3.69 புள்ளிகள் பெற்று பட்டியலில் 129-வது இடத்தில் உள்ளது.
பத்தாவது நாடு
ஜாம்பியா
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா128-வது இடத்தில் உள்ளது. பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள், ஏராளமான வனவிலங்குகள், பெரிய நீர்நிலைகள் மற்றும் பரந்த திறந்தவெளிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு ஜாம்பியா.