மத்திய பிரதேசத்தில் சேலை அணிந்து கால்பந்து விளையாடிய பெண்கள்!!
ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டியிட்டு அசத்தி வருகிறார்கள். இப்போது பெண்கள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதுபோல மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கால்பந்து போட்டி நடந்துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவருமே சேலையில் விளையாடியதுதான். வழக்கமாக சேலை அணிவது சவுகரியமாக இருக்காது என்பது பலரின் எண்ணம். அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கும் வண்ணம் குவாலியரில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் சேலை அணிந்து கால்பந்து விளையாடினர்.
குவாலியரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி, கல்லூரி ஆசிரியைகள் மற்றும் சுய உதவி குழு பெண்களை இணைத்து கடந்த ஆண்டு கால்பந்து போட்டி நடத்தியது. அப்போது 4 அணிகள் கலந்து கொண்டனர். 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றனர். அனைத்து அணிகளிலும் சுமார் 20 முதல் 72 வயதான பெண்கள் கலந்து கொண்டனர். அனைவருமே சேலை அணிந்தே கலந்து கொண்டனர். இந்த உடையில் எந்த அசவுகரியமும் இல்லை என கால்பந்து விளையாடிய பெண்கள் கூறினர்.
சேலை அணிந்த படி அவர்கள் பந்தை அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிப்பதும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி போட்டியில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, சேலை நமது பாரம்பரிய உடை. அதனை அணிவதால் எந்த அசவுகரியமும் இல்லை. இதனை அணிந்து கொண்டு கால்பந்து கூட விளையாடலாம் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த போட்டியில் பங்கேற்றோம். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் இன்னும் அதிக அணிகள் பங்கேற்கும் என்று நம்புகிறோம் என்றனர்.