பறவை காய்ச்சல் காரணமாக 5 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்!!
ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நாட்டில் உள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் நேற்று முன்தினம் டஜன் கணக்கான கோழிகள் செத்தன. அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து பண்ணையில் இருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க பண்ணையில் உள்ள 5 லட்சத்து 58 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.