சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி!!
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று மொழிகளை தவிர வேறு எந்தவொரு மொழியும் இலங்கையின் அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை.
எனினும், அரசியலமைப்பின் சரத்துக்களுக்கு அப்பாற் சென்று கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் அரச மொழியான தமிழ் மொழி அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்திற்கு சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இலங்கையின் சீன ஆதிக்கம் கடந்த காலங்களில் அதிகளவில் காணப்பட்ட நிலையில், சீன மொழியின் பயன்பாடு இன்றும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
சீனாவின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற கொழும்பு துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர் பலகைகளில் சிங்களம், ஆங்கிலம், சீன மொழிகள் கடந்த காலங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், தமிழ் மொழி அந்த காலக்கட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்தது.
சென்ட்ரல் பார்க் என கொழும்பு துறைமுக நகரில் காட்சிப்படுத்தப்பட்ட பெயர் பலகையில், முதலில் சிங்களம், இரண்டாவதாக ஆங்கிலம், மூன்றாவதாக சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த பெயர் பலகையில் எந்தவொரு தமிழ் எழுத்தும் காணப்படவில்லை.
இதையடுத்து, நாட்டில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்து, அந்த பெயர் பலகையில் மாற்றங்களை கொண்டு வர சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்பட்டது.
அதேவேளை, இலங்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகமொன்று 2021ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட குறித்த கட்டடத்தின் நினைவு பலகையில், சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் அரச பயன்பாட்டு மொழிகளாக காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் சட்டத்தை வழிநடத்தும் ஒரு பிரதான இடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை அந்த காலக் கட்டத்தில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
இதையடுத்து, குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி உள்வாங்கப்பட்டிருந்தது.
அதேபோன்று, கொழும்பு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலும் சீன மொழி இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
இவ்வாறு சீன மொழியில் பிரவேசம் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது இந்தி மொழியும் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது இந்தி மொழியில் சில தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் காட்சி பலகைகளில் வருகை மற்றும் புறப்பாடு என கூறப்படுகின்ற விடயம் தற்போது இந்தி மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலம், இந்தி மற்றும் சீன மொழிகளில் முறையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.