மோடி குறித்து விமர்சித்த அதே இடம்… கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!!
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நிதி மோசடி வழக்கில் சிக்கி நாட்டைவிட்டு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோர் குறித்து பேசிய ராகுல் காந்தி, எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருக்கிறது? என்றார். இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. ராகுல் காந்தி அடுத்த மாதம் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில் அடுத்த மாதம் 5ம் தேதி ராகுல் காந்தியின் முதல் பிரசார கூட்டம் நடைபெறுகிறது.
எனவே, இந்த முறை ராகுல் காந்தி என்ன பேசப்போகிறார்? ஆளுங்கட்சிக்கு எதிரான அவரது அஸ்திரம் என்ன? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ம் ஆண்டு தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் ஓராண்டில் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு பாஜகவே காரணம் என காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.