பாடல்களுக்கு ஏற்ப முக பாவனைகளை மாற்றி காட்டி மக்களை கவர்ந்த 9 வயது சிறுமி பிரதிக்ஷாவின் பரிதாப முடிவு!!
‘ஹே… மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே… அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே… ம்… மச்சான் எப்போவரப் போ மச்சான் எப்பவரப்போறே…’ -இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் வரும் இந்த பாடலுக்கு தலைமுடியை கோதிவிட்டு, கைவிரல்களை நளினமாக அசைத்து நடனமாடி, தனது கண்ணசைவுடன் கூடிய முக பாவனையால் அனைவரையும் கொள்ளை கொண்டவர் 9 வயது சிறுமி பிரதிக்ஷா. திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதியின் மகளான இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு வடித்து வந்தார். சிறுமி பிரதிக்ஷா குழந்தை பருவத்திலேயே துருதுருவென்று இருப்பார். அப்போதே அவருக்கு தனித்திறமை ஒன்று இருந்தது.
சினிமாவில் வரும் காமெடி காட்சிகளுக்கு டயலாக் பேசுவார். மேலும் பாடல்களுக்கு அழகிய முக பாவனையுடன் நடனம் ஆடுவார். குழந்தை பருவத்திலேயே அவருக்கு இருந்த இந்த திறமைகள் அவரை இன்ஸ்டாவில் பிரபலமாக்கியது. குழந்தை பருவத்தில் இருந்து சிறுமியாக மாறிய பிரதிக்ஷா இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ஐ.டி.யை கிரியேட் செய்து அதில் சினிமா பாடல்கள், கானா பாடல்களுக்கு தானே முகபாவனை காட்டி நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிடத் தொடங்கினார். ‘கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன் கன்பியூஷன் ஆகிறேன்’ -என்ற பாடலுக்கு கண்பாஷையிலேயே பேசி அவர் வெளியிட்ட வீடியோக்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. தொடர்ந்து சிறுமி பிரதிக்ஷா இன்ஸ்டாவில் வீடியோக்களை வெளியிட தொடங்கினார்.
“சின்ன சின்ன ஆச… திக்கி திக்கி பேச மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காற்றோட வீச…” என மனதை வருடும் காதல் பாடல்கள் அவருடைய இன்ஸ்டா பக்கங்களை அலங்கரித்தன. காதல் பாடல்கள், கிராமிய பாடல்கள் மட்டுமின்றி கானா பாடல்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. ‘தப்பு தண்டா பண்ணதில்ல… பொய்கூட சொன்னதில்ல நானு… அது நானு… நாலு பேரு மத்தியில பொங்க வைப்பேன் நெத்தியில நானு… அது நானு’ என்ற கானா பாடலிலும் அவர் முக அசைவு மற்றும் நடனத்தில் பின்னியெடுத்தார். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். ஒவ்வொரு பாடல்களுக்குமே அந்தந்த பாடல்களுக்கு ஏற்ப முக பாவனைகளை மாற்றி காட்டி அவர் அந்த பகுதி மக்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்தார். இதனால் அந்த பகுதி மக்கள் அவரை ‘இன்ஸ்டா குயின்’ என்று அழைத்தனர். அவரது வீடியோக்களை பார்த்தவர்களும் விமர்சனங்களால் புகழ்ந்து தள்ளினர். இதனால் அவர் இன்ஸ்டா குயினாக தனித்துவமாக வலம் வந்தார். இந்த நிலையில் தான் நடக்கக்கூடாத அந்த சம்பவம் நிகழ்ந்தது.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சிறுமி பிரதிக்ஷா அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தந்தை கிருஷ்ணமூர்த்தியும், தாய் கற்பகமும் அங்கு வந்தனர். சிறுமி பிரதிக்ஷாவிடம், ‘விளையாடியது போதும்… இனி வீட்டுக்கு சென்று படி’ என்று கூறி கண்டித்ததாக தெரிகிறது. மேலும் தாங்கள் வெளியில் செல்வதாகவும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாகவும் கூறி வீட்டின் சாவியை பிரதிக்ஷாவிடம் கொடுத்துவிட்டு பெற்றோர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து கிருஷ்ணமூர்த்தியும், கற்பகமும் வீட்டுக்கு திரும்பினார்கள். அப்போது வீட்டு கதவு உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது.
உடனே கிருஷ்ணமூர்த்தி கதவை தட்டினார். பலமுறை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கவில்லை. இதனால் பயந்து போன கிருஷ்ணமூர்த்தி படுக்கை அறை ஜன்னல் கதவை உடைத்தார். அப்போது சிறுமி பிரதிக்ஷா வெள்ளை நிற சிறிய துண்டால் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் மேல்புற கூரையை பிரித்து வீட்டிற்குள் இறங்கினார். பின்னர் படுக்கை அறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அப்போது சிறுமிக்கு உயிர் இருந்தது. உடனடியாக சிறுமியை தூக்கிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போதும் சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உயிர்காக்கும் சிகிச்சைகளை அளித்த நிலையில் திடீரென்று சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி பிரதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூர் போலீசில் புகார் செய்தார். 9 வயது சிறுமி எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் என்ற கேள்வியும், சந்தேகமும் போலீசாருக்கு எழுந்தது.
இதனால் போலீசார் கிருஷ்ண மூர்த்தியின் வீட்டுக்கே சென்று விசாரணை நடத்தினார்கள். சிறுமி தூக்கில் தொங்கிய அறையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டில் மெத்தையின்மீது சிறிய ஸ்டூல் போட்டு சிறுமி அதில் ஏறியுள்ளார். பின்னர் டவலை ஜன்னல் கம்பியில் கட்டி தூக்குப்போட்டு ஸ்டூலில் இருந்து குதித்துள்ளார். அந்த துண்டு கழுத்தை முழுவதும் நெரிக்காததால் தூக்கில் தொங்கிய படியே 1 மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்கு போராடியுள்ளார். ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது அவருக்கு உயிர் இருந்தும் துரதிருஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. தோழிகள் முன்பு திட்டியதாலேயே அவர் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கண்ணசைவை காட்டி இன்ஸ்டா குயினாக கலக்கிய சின்னஞ்சிறு சிறுமி பிரதிக்ஷாவின் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. விதி ‘திடீர்’ சூறாவளியாய் அவரது வாழ்க்கையை முடித்துவிட்டது. “மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே… அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே… நீ எப்போ வரப்போறே… இனி எப்போ வரப்போறே…”