குலசேகரம் அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அதிகாரி சிக்கினார்!!
குலசேகரம் அருகே உள்ள களியலில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக, புரோன் என்பவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார், களியல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுப்பதற்காக ரசாயன பொடி தடவப்பட்ட 4500 ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோனிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை அவர், கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுத்தார். அதனை முத்து வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவல கத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.