வடமராட்சியில் மீண்டும் கடற்படை பாஸ் நடைமுறை ?
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்தொழிலாளர்கள் கடற்படையின் அனுமதி பெற்றே கடற்தொழிலுக்கு செல்ல வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
சுருக்கு வலை மீன் பிடி உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அதன் போதே கடற்தொழில் அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடலில் நடைபெறும் சட்ட விரோத மீன் பிடிமுறைமைகள் உள்ளிட்டவற்றை ஏன் கடற்படையினர் கட்டுப்படுத்தவில்லை ? நீரியல் வள திணைக்களமும் சட்டவிரோத கடற்தொழில் செய்வோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. என பல கடற்தொழிலாளர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
கடற்படையினரின் அனுமதி பெற்று அவர்களின் கண்காணிப்புக்கள் மத்தியில் கடற்தொழிலுக்கு செல்லும் நடைமுறை முன்னர் இருந்தன. இது தொழிலார்களுக்கு தொல்லையாகவும் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவித்ததை அடுத்து , அந்த நடைமுறைகளை தளர்த்தினோம்.
தற்போது கடற்படையினரின் கண்காணிப்புக்கள் , அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என்பதனால் பலர் சட்ட விரோத தொழில்களில் ஈடுபடுகின்றனர். அதனால் மீண்டும் கடற்படையின் அனுமதி பெற வேண்டும் என்பதனை கட்டாயம் ஆக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த நடைமுறையில் சாதக பாதகம் தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து அதனை தொடர்வதா ? அல்லது சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கை உண்டா என்பது தொடர்பில் ஆராயும் வரையில் கடற்படையின் அனுமதி பெற்ற தொழிலுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.