இந்தியாவில் ஒரே நாளில் 50 சதவீதம் உயர்வு- புதிதாக 3,016 பேருக்கு கொரோனா பாதிப்பு !!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 2 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு ஒரே நாளில் சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 686 பேர், மகாராஷ்டிராவில் 483 பேர், குஜராத்தில் 401, டெல்லியில் 300 பேர், இமாச்சலபிரதேசத்தில் 255 பேர், கர்நாடகாவில் 215 பேர், அரியானாவில் 120 பேர், தமிழ்நாட்டில் 112 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 692 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.73 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.71 சதவீதமாகவும் உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 68 ஆயிரத்து 321 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 1,396 பேர் அடங்குவர். புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாள்தோறும் தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி 13,509 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,606 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லியில் 2 பேர், இமாச்சலபிரதேசத்தில் ஒருவர் என 6 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 8-ஐ பலி கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30, 862 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று 1,10,522 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 92.14 கோடியாக உயர்ந்துள்ளது.