போதிய வருமானம் இல்லாததால் ஆந்திர வாலிபர் துபாயில் தூக்கிட்டு தற்கொலை!!
ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம் தம்பல்லப்பள்ளி மண்டலம், பட்டன்ரெட்டியை சேர்ந்தவர் அனிப்கான் (வயது 39) சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார். விசா காலாவதியான பிறகும் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருந்தார். இவர் ரியாத் நகரில் தெரிந்த நபர் ஒருவரின் பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அதோடு சரியான வேலை இல்லாததால் தாய்லாந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்தார். அனிப் கானுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் லாட்டரியில் பணம் விழவில்லை. வருமானத்திற்கு உரிய வேலையும் இல்லாமல் லாட்டரியிலும் பணம் விழாததால் அனிப் கானிடம் இருந்த பணம் முழுவதும் செலவானது. இதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த அனிப் கான் கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனிப் கானின் பிணத்தை மீட்டனர். தனது பெயருக்கு பதிலாக தெரிந்த நபரின் பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததால், அந்த நபர் இறந்துவிட்டதாக போலீசார் கருதினர். விசாரணையில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனால் இறந்தவரின் முகவரியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டில் ஒரு இலக்கம் தவறாக இருந்ததால், முகவரியை அறிவதில் சிக்கல் ஏற்பட்டது. செல்போனில் இருந்த எண்களை தொடர்பு கொண்டு பேசியபோது, அனிப் கான் சகோதரர் என்று ஒருவர் பேசினார். 7 மாதங்களுக்குப் பிறகு இறந்தவரின் முகவரி தெரிந்தது. இந்திய தூதரக அதிகாரிகள் அனிப் கானின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.