அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல் காந்திக்கு தனது வீட்டை வழங்க முன்வந்த திக்விஜய் சிங்!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பது, காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு தங்கள் வீட்டை வழங்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான தக்விஜய் சிங், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘எனது வீட்டில் நீங்கள் தங்கினால் அதிர்ஷ்டமாக கருதுவேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.மாநிலங்களவை உறுப்பினரான திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.