உச்சத்தில் இருக்கையில் ’கொஹில’ வுக்கு மவுசு !!
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் கொஹில கிழங்கின் விற்பனை 40% ஆல் கூடியுள்ளதாக ஹெக்டர் விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட அறிக்கை தெரியப்படுத்துகிறது.
பெரும்பாலான மக்கள் உணவுக்காக தம்முடைய இயலுமைக்கேற்றவாறு காய்கறிகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அதற்கேற்ப அவரையின் நுகர்வு 10% இனாலும் கரட்டின் நுகர்வு 29% இனாலும் பூசணிக்காயின் நுகர்வு 27% இனாலும் கத்தரிக்காயின் நுகர்வு 27% இனாலும் இலைக் காய்கறிகளின் நுகர்வு 10% இனாலும் குறைந்துள்ளதாக குறித்த அறிக்கை விபரிக்கின்றது.
இலங்கை சனத்தொகையில் 86 சதவீதமான மக்கள் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதால், தங்கள் உணவுமுறையை மாற்றிக்கொண்டதுடன் இன்னுமொரு 75 சதவீத மக்கள் உணவைத் தயாரிக்கப் பயன்படுத்தும் உணவு பொருட்களைக் குறைத்துள்ளனர். அதேபோல் 45% மக்கள் உணவு உண்ணும் வேளைகளைக் குறைத்துள்ளதுடன் 38% பேர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளனர்.
அண்மையில் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் ஆய்வறிக்கைகளை ஹெக்டர் கொப்பகெடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நேற்று வெளியிட்டது.
நகர்புறத்தில் 43% மக்களும் கிராமபுறங்களில் 52% சனத்தொகையும் பெருந்தோட்டத்துறையில் 67% மக்களும் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.
2021 செப்டெம்பர் மாதத்திலிருந்து 2022 முடிவு வரையில் இலங்கையின் உணவு ஒவ்வாமை 95 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் ஏற்பட்ட மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடி இதுதான் என அறிக்கை தெரிவிக்கிறது.
ஊட்டச்சத்தை பொறுத்தளவில் நகர, கிராம மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் முறையே 25%, 03% மற்றும் 7 சதவீதமான மக்கள் புரதச் சத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.
மேலும் 78 சதவீதமான பெருந்தோட்ட மக்கள் தமது உணவில் மீன் மற்றும் இறைச்சியை சேர்த்துக் கொள்ளவில்லையென அறிக்கை தெரிவித்துள்ளது.