ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்- ஜெர்மனி கருத்து!!
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராளு மன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்கா ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று ஜெர்மனி அரசு கருத்து தெரிவித்து உள்ளது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் செய்தி தொடர்பாளர் டெல்லியில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்தி மீதான குற்றவழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம்.
அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டிய வரை ராகுல்காந்தி கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. அந்த அப்பீல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா? என்பது தெளிவாகும். அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயக கொள்கைகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் நேற்று பேசும்போது, “எந்தவொரு வெளிநாட்டு தூதரும் ராகுல்காந்தி விவகாரம் குறித்து என்னிடம் பேசவில்லை” என்று தெரிவித்து உள்ளார்.