“எங்கள் சாமானை எடுக்கையில் உங்கள் சாமான் கவனம்” !!
உதடுகளுக்கு லிப்டிக்ஸ் பூசிய பெண்ணொருவர், அவசர அவசரமாக அந்த சில்லறை கடைக்குள் நுழைந்தார். அங்கு வயதான ஒருவரே முதலாளியாக இருந்தார்.
பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், இதழ்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுகின்றன. கடந்த 10ஆம் திகதி கடைக்குள் புகுந்த இளம் வயதான தாயொருவர், சில புத்தகங்கள் தொடர்பில் முதலாளியிடம் வினவினார்.
கடைக்குள் அழைத்த முதலாளி, புத்தக இறாக்கைகளை காண்பித்து அதிலிருந்து தேர்ந்தெடுத்து கொள்ளுமாறு அந்தப் பெண்ணிடம் கேட்டுக்கொண்டார்.
கடைக்குள் நுழைந்த அந்தப் பெண், இரண்டொரு நிமிடங்கள் மட்டுமே இறாக்கைகளில் நோட்டம் விட்டுவிட்டு, தான் தேடும் அந்தப் புத்தகங்கள் இல்லையென கூறிவிட்டு உடனடியாக கடைக்குள் இருந்து வெளியேறி தலைமறைவாகிவிட்டார்.
ஒருசில நிமிடங்களுக்குள் கடையில் இருந்து வெளியேறியமையால் சற்று சந்தேகமடைந்த முதலாளி, தான் கொள்வனவு செய்த புத்தகங்களில் அந்தப் பெண் கேட்ட புத்தகங்கள் இல்லாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என நினைத்துக்கொண்டு பாதுகாப்பு கமெராக்களை சோதிக்க தொடங்கினார்.
முதலாளி நினைத்ததைப் போல, இறாக்கைக்கு அருகில் சென்ற அந்தப் பெண், ஒரு வகையான புத்தகங்கள் நான்கை எடுத்து, தான் அணிந்திருந்த ரவிக்கைக்குள் திணித்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
அந்தக் காட்சியுடன் ரவிகையில் இருந்து ஏதோ விழுவதையும் முதலாளி அவதானித்துள்ளார். அதன்பின்னர் அந்த இறாக்கைக்கு அருகில் சென்று பார்க்கும்போது சிறிய பெண்டனுடன் கூடிய தங்க சங்கிலி கீழே விழுந்து கிடந்துள்ளது.
புத்தகங்கள் நான்கையும் அவசர, அவசரமாக ரவிக்கைக்குள் திணிக்கும் போது, தான் அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்ததை அப்பெண் கவனிக்கவில்லை
அதன்பின்னர், அந்த முதலாளி தன்னுடைய பிங்கிரிய கடைக்கு முன்பாக மறுநாள் கொட்டை எழுத்தில் விளம்பரம் ஒன்றை வைத்துள்ளார்.
அந்த விளம்பர பலகையில், “ எங்கள் பொருட்களை எடுத்துச் செல்லும் போது, உங்கள் பொருட்களையும் எடுத்துச் செல்க” என எழுதப்பட்டிருந்தது.
எனினும், சாமானுக்கு சாமான் மாற்றிக்கொள்வதற்கு இதுவரை எவரும் வருகைதரவில்லை என கூறிய அந்த முதலாளி 180 ரூபாய் செலவழிப்பதற்கு பதிலாக 80 ஆயிரம் ரூபாய் தங்க சங்கிலியை அந்தப் பெண் இல்லாமற் செய்துக்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.