திருவனந்தபுரம் வெங்கானூர் பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் பிரபஞ்சயாகம்: நாளை முதல் 7 நாட்கள் நடக்கிறது!!
திருவனந்தபுரம் வெங்கானூரில், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மைக்காகவும், உயிரினங்களின் பாதுகாப்பிற்காகவும், இந்திய தேசத்தை இயற்கை சீற்றம், தொற்று வியாதிகளில் இருந்து காப்பாற்றுவதற்காக பிரபஞ்சயாகம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த யாகம் கைலாசபுரி சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது. இதில் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், திருச்செந்தூர், திருப்பரம் குன்றம், சுவாமிமலை முதலான முருகனின் ஆறுபடை கோவில்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், மூகாம்பிகை கோவில் போன்ற கோவில்களின் முக்கிய புரோகிதர்களும், சன்னியாசிகளும் கலந்து கொள்கிறார்கள். இதில் 12 ஆயிரத்து 6 செங்கற்களால் அமைக்கப்பட்ட 6 யாக சாலைகளில் 1008 அதி விசேஷமான மூலிகை மருந்துகள், பழவகைகள், தானியங்கள், அதிக அளவிலான நெய், தேன், சுகந்த திரவியங்கள், பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படும்.
நவக்கிரக பூஜை 7 நாட்கள் நடைபெறும் பிரபஞ்சயாகத்தை முன்னிட்டு தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையும் பிரதம பூஜை, கலச ஸ்தாபனம் தேவதை அனுமதி பூஜை, விக்னேஷ்வரா பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, வாஜி பூஜை, கஜ பூஜை, கங்கா பூஜை உள்பட ஏராளமான பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் தினமும் மாலையில் சங்கீத கச்சேரி நடைபெறும். இந்த கோவிலில் பிரபஞ்ச யாகத்தை தொடர்ந்து மே மாதம் 5-ந்தேதி, ஜூன் மாதம் 4-ந்தேதி, ஜூலை மாதம் 3-ந் தேதி, ஆகஸ்டு மாதம் 1, 31-ந் தேதிகள் அக்டோபர் மாதம் 28-ந் தேதி, நவம்பர் மாதம் 27-ந் தேதி, டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஆகிய நாட்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இந்த கோவில் திருவனந்தபுரத்தில் இருந்து திருவல்லம், வாழ முட்டம் வழி வெங்கானூர் சாவடி நடை உச்ச கடை செல்லும் வழியில் உள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், பள்ளிச்சல் வழியாக விழிஞ்ஞம் செல்லும் வழியில் பெரிங்கமலை சாவடிநடை சாலையில் இந்த கோவில் உள்ளது. நெய்யாற்றின்கரை, பாலராமபுரம் வழியாக வரும்போது உச்சகடை – சாவடிநடை சாலையில் இந்த கோவில் உள்ளது. பிரபஞ்சயாகத்துக்கான ஏற்பாடுகளை பவுர்ணமிக்காவு மடாதிபதி சின்கா காயத்ரி தலைமையில், கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.