10 வயது மாணவி 4 வருடங்களாக துஷ்பிரயோகம்!!
10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (31) தெரிவித்தனர் .
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் துஷ்பிரயோகங்களையும் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
ஆசிரியர் சம்மந்தப்பட்ட மாணவியிடம் சம்பவத்தின் உண்மை தன்மையை விசாரித்து அறிந்து கொண்டு உடனடியாக, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த 10 வயது மாணவி மூவரால் கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து துரிதமாக செயல்பட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்பான மூவரை கைது செய்துள்ளனர்.
10 வயது மாணவி வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலகர பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர், மாணவியின் உடன் பிறந்த சகோதரனான சமனங்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞர், உறவினரான வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும், சிறுமியை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.