;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்- மணீஷ் திவாரி நம்பிக்கை!!

0

கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான மணீஷ் திவாரி கேரளாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தியின் தண்டனை சட்டத்தில் மோசமானது என்றும், அவரது தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.

‘ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனவே, மேல்முறையீடு செய்ய அவசரம் இல்லை. அவசர அவசரமாக அவரை தகுதி நீக்கம் செய்து, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை பாஜக அரசு காலி செய்யும்படி கூறியது. இதிலிருந்து அவர்களின் கெட்ட எண்ணம் தெரிகிறது’ என்றும் மணீஷ் திவாரி கூறினார். அப்போது கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த திவாரி, காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் தேர்தல் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.