அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு!!
அமெரிக்காவின் வெளியுறவு துறையின் மேலாண்மை மற்றும் வளத்துறையின் துணை அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்டு ராகுல் வர்மாவை அதிபர் ஜோ பைடன் கடந்தாண்டு டிசம்பரில் நியமித்தார். இந்நிலையில், செனட் சபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் 67 வாக்குகளை பெற்று ரிச்சர்டு தேர்வானார். இதன் மூலம், அமெரிக்க வெளியுறவுத் துறையின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் இந்திய வம்சாவளி என்ற பெருமையை ரிச்சர்ட் வர்மா பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் சர்வதேச பொது கொள்கைக்கான தலைமை சட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். முன்னதாக, கடந்த 2015-17ம் ஆண்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றினார்.