மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப்போரை உருவாக்குகின்றன – பெலாரஸ் குற்றச்சாட்டு! !
உக்ரைனுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலகப்போரை தூண்டுவதாக பெலாரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த ஆதரவின் மூலம் அணுவாயுதப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக பெலாரஸ் அதிபர் லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே பெலாரஸ் அதிபர் இதனைக் கூறியுள்ளார்.
“உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆதரவானது உலக நாடுகளிடையே போர்ப் பதற்றத்தையும், அணுவாயுதப் பயன்பாடு தொடர்பிலான சிந்தனைகளையும் மேலும் தூண்டுவதாக அமைகின்றது.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளை நிபந்தனை இல்லாத பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுகின்றேன்.” என பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் அதிபரின் கருத்துக்களை ரஷ்யா கவனிப்பதாகவும், அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த வாரம் இது தொடர்பில் பெலாரஸ் அதிபருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய தெரிவித்த விடயம், அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் அமையாது எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.