19 பேரும் மஹிந்தவை சந்தித்து பேச்சு !!
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் விஜேராம இல்லத்தில் சனிக்கிழமை (01) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு, நாட்டில் எரிபொருளை விநியோகிக்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு விளைவித்த 4 தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட 20 பேர், கடந்த 29ஆம் திகதி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதுடன், கூட்டுத்தாபன வளாகம் மற்றும் சேமிப்பு முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
குறித்த ஊழியர்களை மீண்டும் கடமையில் இணைத்துக்கொள்வது குறித்தே இந்த பேச்சு இடம்பெற்றுள்ளதாகவும் 20 பேரில் 19 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரியவருகிறது.