டொலரை புறக்கணித்த இந்தியா மலேசியா..! – வர்த்தக பரிமாற்றம் ரூபாயில் !!
இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டே உள்ளது.
கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமெரிக்க டொலரிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.
அதேவேளை, ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் நிலையில் அதற்கான வர்த்தகம் இந்திய ரூபாய் மற்றும் ரஷிய ரூபெல் மதிப்பில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்யும்போது இந்திய ரூபாயிலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவு செய்தது.
இந்நிலையில், இந்தியா – மலேசியா இடையேயான வர்த்தக பரிவர்த்தனைகள் இனி இந்திய ரூபாயிலும் நடைபெறும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
பிறநாட்டு பணத்துடன் (அமெரிக்க டொலர் உள்பட) சேர்த்து மலேசியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக பரிவர்த்தனைகள் இனி இந்திய ரூபாயிலும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுடனான வர்த்தகத்தில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதால் சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.