ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் குற்றச்சாட்டால் டிரம்ப்புக்கு குவிகிறது தேர்தல் நன்கொடை: 24 மணி நேரத்தில் ரூ.32 கோடி திரட்டினார்!!
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட 24 மணி நேரத்தில் அவருக்கு ரூ.33 கோடி தேர்தல் நன்கொடையாக குவிந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுடனான தொடர்பை மறைக்க தனது வக்கீல் மூலமாக நடிகைக்கு சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் பணம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை தனது வக்கீலுக்கு டிரம்ப் முறைகேடாக கொடுத்ததாக அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதனால், டிரம்ப் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் இல்லாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் டிரம்ப் உள்ளார். கிரிமினல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவருக்கு ஏராளமானோர் நிதி வழங்கி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் டிரம்ப்புக்கு ரூ.32 கோடி தேர்தல் பிரசார நன்கொடை குவிந்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டிரம்ப் மீதான குற்றச்சாட்டை பொய் என அமெரிக்க மக்கள் கருதுவதாக டிரம்ப் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தனக்கு எந்த கருத்தும் இல்லை என அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் கூறியது குறிப்பிடத்தக்கது.