நீங்கா புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர்!!
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. திருவாரூர் நகர வீதிகளில் பிரமாண்டமாக வலம் வரும் ஆழித்தேர் வரலாற்றில் நீ்ங்காத புகழை பெற்று உள்ளது. ட்சக்கணக்கான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படும் ஆழித்தேர் திருவாரூர் நகர வீதிகளில் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆழித்தேரோட்டத்தை காண திருவாரூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் கூடுவது வழக்கம். திருவாரூரில் பழங்காலத்தில் இருந்தே ஆழித்தேரோட்டம் நடைபெற்றதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன. கி.பி.1748-ம் ஆண்டு நிகழ்ந்த தேர்திருவிழா பற்றிய வரலாற்று தகவல்கள் கிடைத்துள்ளன. தேர்திருவிழா பற்றிய செய்திகள் தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகாலில் மோடி ஆவணங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. . கி.பி.1748-ம் ஆண்டு கிடைத்த ஆவணத்தின் மூலம் தொடர்ந்து 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் தேர் திருவிழா நடைபெற்ற செய்திகளை அறிய முடிகிறது. இவ்வாறு உலாவந்த தேர் 1926-ம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்தின் போது ஏற்பட்ட தீவிபத்தில் தேர் முற்றிலும் எரிந்தது.
பின்னர் தியாகராஜ பெருமான் தொண்டர்கள் அனைவரும் ஒன்று கூடி புதிய தேர் செய்ய முடிவு செய்து பொருளுதவி ஈட்டினர். 1928-ம் ஆண்டு புதிய தேர் கட்டுமான பணி தொடங்கி 1930-ம் ஆண்டு முடிந்தது. 2-3-1930 அன்று புதிய தேர் ஓடியது. திருவாரூர் தேருக்குரிய அழகே அதன் பிரம்மாண்டம் தான். மரத்தேர் 30 அடி உயரம், விமானம் வரை உள்ள தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி வரை 48 அடி, விமானம் 12 அடி, தேர்கலசம் 6 அடி என 96 அடி உயரத்துடன் திருவாரூர் ஆழித்தேர் கம்பீரமாக காட்சி அளிப்பதை ஆழித்தேரோட்ட நாளில் காணலாம்.