ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரை சிறை பிடித்த தலிபான்கள்!!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு நாட்டை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டவர்கள் 3 பேரை தலிபான்கள் கைது செய்து சிறை பிடித்துள்ளதாக இங்கிலாந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த ஸ்காட் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் நன்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் நாங்கள் நம்புகிறோம். சித்ரவதை போன்றவற்றில் அவர்கள் உட்படுத்தப்பட்டனர் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரஜைகளுடன் தூதரக தொடர்பை பெற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.
அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருகிறோம் என்றார். மூன்று பேரில் 2 நபர்கள் கடந்த ஜனவரி முதல் தலிபான்களால் பிடிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 3-வது நபர் எவ்வளவு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த 5 பேரை தலிபான்கள் சிறை பிடித்தனர். அவர்களை 6 மாதங்களுக்கு பிறகு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.