சித்த வைத்திய அலகுகளைப் பீடங்களாகத் தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி!!
யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு ஆகியவற்றை சித்த வைத்திய பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி கல்வி அமைச்சரினால் பீடங்களுக்கான பிரகடன வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அமைச்சரவை அறிவுறுத்தியிருக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு ஆகியவற்றை சித்த வைத்திய பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவு கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி அமைச்சரால் முன்வைக்கப்பட்டது.
அன்றைய தினம் கல்வி அமைச்சரின் முன்மொழிவை ஆராய்ந்த அமைச்சர்கள் குழு, இரு பல்கலைக்கழகங்களிலும் சித்த வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆளணி மற்றும் பௌதிக வளங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு கல்வி அமைச்சருக்கு ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரைப் பணித்திருந்தது.
இரு பல்கலைக்கழகங்களிலும் சித்த வைத்திய பீடங்கள் இயங்குவதற்குத் தேவையான பௌதிக வளங்களும், ஆளணியும் இருப்பதை உறுதிப்படுத்தி கல்வி அமைச்சருக்கு ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் வழங்கிய அறிக்கையும், சித்த வைத்திய பீடங்களின் முக்கியத்துவத்தை விபரித்து கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவும் கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு ஆகியவற்றை சித்த வைத்திய பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுமுள்ளது.