மாணவர்கள் காதலிக்க விடுமுறை வழங்கிய கல்லூரிகள் !!
காதலிப்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீனாவில் ஏற்பட்டுள்ளது. சடுதியாக பிறப்பு விகிதம் சரிவடைந்த நிலையிலேயே கல்லூரிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
முதற்கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் 9 பிரபல கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ஒரு வார காலம் காதலுக்காக விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளன.
பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அரசியல் ஆலோசகர்கள் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனர். ஆனால் தற்போது தேச நலன் கருதி பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் தனித்துவமான முயற்சியில் களமிறங்கியுள்ளன.
இந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் சீனாவின் பிரபலமான 9 கல்லூரிகள் ஒரு வார காலம் விடுமுறை அளித்து மாணவர்களை காதலிக்க ஊக்குவித்துள்ளனர். இதில் Mianyang Flying கல்லூரியானது ஏப்ரல் 1 முதல் 7ம் திகதி வரையில், மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், தங்கள் வாழ்க்கையை அதனூடாக நேசிக்கவும் விடுமுறை அறிவித்து ஊக்குவித்துள்ளது.
இந்த 7 நாட்களில் தங்கள் அனுபவங்களை குறிப்பெடுக்கவும், பயண நாட்களில் தங்கள் அனுபவங்களை காணொளிகளாக பதிவு செய்யவும் மாணவர்களிடம் கல்லூரிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சுமார் 20 பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தொகை சரிவடைவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு முன்வர வேண்டும் என நிபுணர்கள் தரப்பு கேட்டுகொண்டுள்ளது.
சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, 2021ல் மூன்று பிள்ளைகள் வரையில் தம்பதிகள் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதியை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற கட்டுப்பாடுகள் விதித்திருந்தும், சீன தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டியதாகவே கூறப்படுகிறது.
மேலும், குழந்தை கவனிப்புக்கு மற்றும் கல்விக்கு அதிக செலவு, குறைந்த வருவாய், அரசாங்கத்திடம் இருந்து போதிய உதவிகள் இன்மை மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவை இளம் தம்பதிகளை யோசிக்க வைத்துள்ளது.