2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார்!!
2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்தி ரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.
மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து அவரது மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப் பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீடு செய்வதற்காக அவர் சூரத் செல்கிறார். 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அவர் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார். மேல்முறையீடு மனுவில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்தாகும்.