மனோ கணேசன் எம்.பி விடுத்துள்ள அழைப்பு !!
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை பாராளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த. சித்தார்த்தன் எம்.பி, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சீ. வி. விக்கினேஸ்வரன் எம்.பி ஆகியோருக்கு மின்னஞ்சல் கடிதம் மூலமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்கள் மற்றும் பங்காளி கட்சி தலைவர்களான பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி ஆகியோரின் உடன்பாட்டுடன் இந்த அழைப்பை விடுப்பதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வினவிய போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது நோக்கம், இலங்கை பாராளுமன்றத்தில், தமிழ் பாராளுமன்ற அரங்கம் என்ற அமைப்பை உருவாக்குவதாகும்.
இதுபற்றி நான் பல்லாண்டுகளுக்கு முன்பே கலந்துரையாடி உள்ளேன். எனினும் அன்று நிலவிய அரசியல் சூழல் காரணமாக அது அன்று சாத்தியமாகவில்லை. இன்று அதற்கான சாதகமான அரசியல் சூழல் உருவாகி வருவதாக நினைக்கிறேன்.
இதுபற்றி கொழும்பில் வாழும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனையும் சந்தித்து உரையாட முடிவு செய்துள்ளேன்.
நம் நாடு இன்று சந்தித்துள்ள தேசிய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை தேட இலங்கை அரசும், அதற்கு துணையாக சர்வதேச சமூகமும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இம்முயற்சிகளை வரவேற்கும் அதேவேளை, பொருளாதார மீட்சியுடன் நின்று விடாமல், தேசிய நெருக்கடிக்கு மூலகாரணமான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தேடலும், இதனுடன் சமாந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத்தமிழ் சகோதரர்களின் தனித்துவ அரசியல் அபிலாஷைகளையும், தென்னிலங்கையில் வாழும் மலையக தமிழ் மக்களின் தனித்துவ அரசியல் அபிலாஷைகளையும் அடிப்படையாக கொண்டு, இலங்கை அரசுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை தனித்தனியாக முன்னெடுக்க, அவ்வந்த மக்களின் ஆணையை பெற்ற அரசியல் கட்சிகளின் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அரசியல் தீர்வு பேச்சுகளை, தமிழ் பாராளுமன்ற அரங்கத்தின் மூலம் முன்னெடுக்கும் நோக்கம் எனக்கு கிடையாது.
இந்த முயற்சியில் இன்னமும் பல தமிழ் கட்சிகளை இணைத்துக்கொள்ள வேண்டும், முஸ்லிம் சகோதரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்என்ற யோசனைகள் இருக்கின்றன.
அவற்றை எதிர்காலத்தில் கவனிக்க வேண்டும் என விரும்புகிறேன். தற்போது அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் கட்சிகளின் தலைவர்களது அதிகாரபூர்வ பதில்களை அடுத்தே இது தொடர்பில் எனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்” என்றார்.