ஏலம் போகும் எம்.பிக்கள் எம்மிடம் இல்லை !!
எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு செல்வதற்குப் பதிலாக அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர் காத்திருப்பதாகவும் ஏலத்துக்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பணத்துக்கு அடிபணியும் எம்.பிகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என்றும் மக்கள் ஆணைக்கு மாத்திரமே அவர்கள் அடிபணிவர் எனவும் குறிப்பிட்ட அவர், எமது எம்.பிக்களை முடிந்தால் பணம் கொடுத்து வாங்குங்கள் என்று சவால் விடுத்தார்.
சனிக்கிழமை (01) மாலை கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சிதாவல் செய்தி கேட்டு முன்னைய எதிர்க்கட்சித் தலைவர்கள் தமது உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ள சிங்கப்பூருக்கு அனுப்பியது போன்ற அத்தகைய தேவைப்பாடு தனக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்உறுப்பினர்கள் ஏலத்துக்கு விலைபோக மாட்டார்கள் என்று தான் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக போலிச் செய்திகளை உருவாக்கி சமூகவலைதளங்களில் பதிவிட்டு, கோயபல்ஸின் தத்துவத்துக்கு அமைய போலிச் செய்திகளை மக்கள் மனதில் உண்மையென நிலைநிறுத்தும் சதியில் கூடிய ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
இதில் ஐக்கிய மக்கள்சக்தியின் பெருமளவிலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் என்று வரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சந்திம விரக்கொடி மற்றும் ஜயந்த ஹேரத் போன்ற மொட்டு எம்.பிகள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர் என்பதே பாராளுமன்றத்தில் உண்மையான நிலைப்பாடாகும் என்றார்.
இன்னும் அதிகமானோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர் என்றும் இந்த உண்மை நிலையை மறைத்து அரசாங்கம் பொய்களை புனைந்து கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை தவிர்த்து எதிர்க்கட்சிக்கு வந்தாலும், அவ்வாறு வரும் சகலரையும் இணைத்துக் கொள்ள எதிர்க்கட்சி தயாராக இல்லை எனவும், வருபவர்கள் ராஜபக்சர்களின் அடிமைகளாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்க பணமில்லாத அரசாங்கத்திடம் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்குவாங்கும் அளவுக்கு பணம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பிரயோகித்து மக்களின் மனித உரிமைகளை மீறி மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், தற்போது புதிதாக தொழிற்சங்கத்தினரையும், மாணவ போராட்டக்காரர்களையும் பங்கரவாதிகளாக அடையாளப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.