ராகுல் பதவி பறிப்பு, எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி இருக்கிறது: சசிதரூர்!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:- ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, எதிர்க்கட்சிகளை ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒன்றுபடுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்று சேரவும், ஒருவர் ஓட்டை மற்றவர் பிரிப்பதை நிறுத்தவும் ஒரு காரணத்தைக் கண்டுள்ளன. 2024 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது. தங்கள் மாநிலங்களில் காங்கிரசை எதிர்த்து வந்த டெல்லியின் ஆம் ஆத்மி, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ், உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி, தெலுங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி, கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவை ஒன்றுபட்டுள்ளன.
ஒன்றுபட்டால் வாழ்வோம், பிரிந்தால் வீழ்வோம் என்ற பழமொழியின் உண்மையை பல கட்சிகள் உணரத்தொடங்கி உள்ளன. நாடு முழுவதும் சுவடு பதித்துள்ள ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். நாடாளுமன்ற தேர்தலில் 200 இடங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும்தான் நேரடி போட்டி. மற்ற எதிர்க்கட்சிகள் ஒரு மாநிலத்தில் வலுவாக இருக்கின்றன. மேலும் ஒன்றல்லது 2 மாநிலங்களில் இருக்கின்றன. இந்த சூழ்நிலைகளில், நாங்கள் உண்மையில் ஒரு மாற்றை வழங்குவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிப்போம். நான் கட்சித்தலைவராக இருந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கு சிறிய கட்சிகளில் ஒன்றை எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஊக்குவிப்பேன்.
எனது பார்வையில், ஒற்றுமைதான் முக்கியம். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை அவரது பாட்டி இந்திராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு இணையாகப் பார்க்கிறீர்களா என கேட்கிறீர்கள். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலும், பதவி பறிப்பிலும் மக்களின் அனுதாபம் கிடைத்திருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியின் தலைவருக்கு சிறைத்தண்டனை விதித்து, நாடாளுமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை தடுப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மக்கள் உணர்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.