அமெரிக்காவில் சக்திவாய்ந்த புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!!
அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு சுமார் 60 புயல்கள் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 8 மாகாணங்களில் பல நகரங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 5 லட்சம் பேர் இருளில் தவித்து வருகின்றனர். டென்னிசி மாகாணம், வின், அர்கனாஸ், சுல்லிவன், இண்டியானா நகரங்கள் மற்றும் இல்லினாய்ஸ், அலபாமா, மிச்சிபி மற்றும் லிட்டில் ராக் பகுதிகளில் பொதுமக்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் புயலால் 11 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இல்லினாய்ஸ், ஆர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் மேலும் பல உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பல புயல்கள் தாக்கக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்