பின்லாந்து பாராளுமன்ற தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!
பின்லாந்தில் இன்று பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2400 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும் பிரதமர் சன்னா மரின் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, பெட்டேரி ஓர்போ தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி மற்றும் ரிக்கா புர்ரா தலைமையிலான தி ஃபின்ன்ஸ் கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி உள்ளது.
பிரதமர் சன்னா மரினின் சமூக ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றியது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இன்று நள்ளிரவில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவின் இளம் தலைவர்களில் ஒருவரான மரின் (வயது 37), கொரோனா தொற்றுநோயை அவரது அமைச்சரவை திறமையாக கையாண்டதற்காகவும், நேட்டோவில் சேருவற்காக அதிபர் சவுலி நினிஸ்டோவுடன் இணைந்து அவர் அளித்த பங்களிப்பாலும் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றார்.
மேலும், கடந்த ஆண்டு உக்ரைனுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தது சர்வதேச கவனத்தை அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என பிரதமர் மரின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம், அதிகரித்து வரும் கடன், காலநிலை மாற்றம், கல்வி, குடியேற்றம் மற்றும் சமூக நலன்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தேர்தல் பிரசாரத்தின்போது அதிகமாக விவாதிக்கப்பட்டன.