இருபாலை சிறுவர் இல்லத்துக்கு சட்டவிரோத அனுமதி : வட மாகாண கல்வியமைச்சின் தன்னிச்சையான செயல் அம்பலம்!!
இருபாலை கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியிலிருந்து 3 சிறுமிகள் தப்பித்துச் சென்றதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மாணவர் விடுதி சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் இயங்கியமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடுதியில் இணைக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சிறுவர் விடுதிக்கு வடமாகாண கல்வியமைச்சு தன்னிச்சையான அனுமதி வழங்கியுள்ளமை, சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளமை, சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளமை உட்படப் பல விடயங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
கானான் ஜெப ஆலயத்தின் மாணவர் விடுதியிலிருந்து கடந்த 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 3 சிறுமிகள் தப்பித்துச் சென்றுள்ளனர். விடுதியிலிருந்து வெளியேறிய மாணவிகள், அருகிலிருந்த முச்சக்கரவண்டிச் சாரதிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறிச் சென்றுள்ளனர். இதை அறிந்த விடுதி நிர்வாகம் பேருந்துச் சாரதியைத் தொடர்பு கொண்டு சிறுமிகள் மூவரையும் முகமாலையில் இறக்கித் திருப்பி அழைத்து வந்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு சிறுவர் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தப்பியோடியவர்களில் இரு சிறுமிகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மற்றைய சிறுமி வேறு ஒரு சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சிறுவர் நீதிமன்றம் பணித்ததைத் தொடர்ந்து சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள், கோப்பாய் பொலிஸார் நேற்று முன்தினம் கானான் ஆலயத்துக்குச் சென்று ஆராய்ந்தனர்.
அது தொடர்பிலான அறிக்கை சிறுவர் நீதிமன்ற நீதிவானிடம் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவர் இல்லத்திலிருந்த 13 சிறுமிகளையும், தப்பியோடிய 3 சிறுமிகளில் மற்றோர் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட சிறுமியுமாக 8 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 14 பேரையும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்டமருத்துவ அதிகாரியுடம் முற்படுத்துமாறு நீதவான் பணித்துள்ளார்.
சிறுமிகளிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, விசாரணை இடம்பெற்றால் சிறுமிகள் எவ்வாறு பதிலளிக்கவேண்டும் என்பது தொடர்பிலும் அவர்களுக்கு நிர்வாகம் சொல்லிக்கொடுத்த விடயமும் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த விடுதியில் சேர்ப்பதற்கு முன்னர் சில சிறுமிகள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் விடுதியில் சேர்க்கப்பட்ட பின்னர் மதம் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரும் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டுள்ளனர்.
அதிகாலை 4 மணிக்கு விடுதியின் அருட்சகோதரிகளே தம்மை வந்து எழுப்புவதாகவும், நித்திரையால் எழும்பாமல் இருந்தால் நகத்தால் நுள்ளி எழுப்புவதாகவும் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான காயங்கள் மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளன.
அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரையில் வழிபாடு இடம்பெறும் என்றும் அதன் பின்னர் பாடசாலை செல்லும் வரையில் அங்குள்ள முற்றத்தை கூட்டுவது உள்ளிட்ட வீட்டுப் பணிகளை மேற்கொள்ளப் பணிக்கப்பட்டதாகவும் சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை முடிந்து வந்த பின்னர் பைபிளை பாடமாக்கத் தருவதாகவும், அதன் பின்னர் சிறிது நேரம் நித்திரை கொள்வதற்கு அனுமதிப்பதாகவும் சிறுமிகள் குறிப்பிட்டுள்ளனர். பி.ப. 5 மணிக்கு தோட்ட வேலைகளைச் செய்யப் பணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அங்குள்ள அருட்தந்தையரின் வளர்ப்பு நாய்களுடன் விளையாட வேண்டும் என்றும் சிறுமிகள் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளனர். இரவு 6.30 மணியிலிருந்து 10 மணி வரை வழிபாட்டில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பணிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தினமும் தமக்கு விற்றமின் சி மற்றும் விற்றமின் டி குளிசைகள் வழங்கப்படுவதாகவும் சிறுமிகள் விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மேற்படி இடத்தில் முன்பு சிறுவர் இல்லம் ஒன்று இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில், வடக்கு மாகாண கல்வி அமைச்சராக த.குருகுலராஜா இருந்த காலப் பகுதியில் மாணவர் விடுதியாக இயங்குவதற்கான அனுமதி வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையுடன் இல்லாத இவ்வாறனதொரு விடுதிக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்க முடியாது என்றும் ஆகக் குறைந்தது இவ்வாறானதொரு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்துக்கோ, கோப்பாய் பிரதேச செயலகத்துக்கோ, சிறுவர் நன்னடத்தை திணைக்களத்துக்கோ தெரியப்படுத்தப்படவில்லை என்றும் துறைசார் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மாணவர் விடுதிக்கான அனுமதி வழங்கிய கடிதத்தில், விடுதி மாணவர்களின் பிரதான நோக்கம் கற்றல் செயற்பாடு எனவும் அதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான போதிய காலம் ( பிற்பகல் 6.00 – 8.30 மணி ) வழங்கப்படுவதோடு, மாணவர்களின் உடல், உள நலனைக் கருத்தில் கொண்டு இரவு 9.00 – 9.30 மணிக்குள் நித்திரைக்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இவ் விடுதி வட மாகாண எல்லைக்குட்பட்டதனால் வட மாகாணத்திலுள்ள மாவட்டங்களுக்குரிய மாணவர்களையே விடுதிக்கு அனுமதிக்க முடியும் என்றும் நிபந்தனையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சு வழங்கிய அறிவுறுத்தல்களையும் மீறியே மேற்படி மாணவர் விடுதி இயங்கியுள்ள நிலையில் இதற்குப் பொறுப்பானர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அழைக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தல்!!
யாழில். அனுமதியின்றி நடாத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை – 13 சிறுவர்கள் மீட்பு!!