அதானி விவகாரத்தால் தொடர் அமளி- பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பா.ஜனதாவும் வலியுறுத்தி பாராளுமன்றத்தை முடக்கின. இதனால் 9 நாட்கள் இரு அவைகளும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை கிளப்பியதால் இரு அவைகளும் பாதிக்கப்பட்டது.
12 நாட்களாக பாராளுமன்றம் முடக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி பாராளுமன்றம் ஏப்ரல் 4-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன. 4 நாட்களுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மக்களவையில் எம்.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புனே தொகுதி எம்.பி. கிரீஷ் பாப்பட் கடந்த 29-ந் தேதி மரணம் அடைந்தார். திருச்சூர் மாவட்டம் சாலக்குடி தொகுதி முன்னாள் எம்.பி.யும், நடிகருமான இன்னசென்ட் கடந்த 26-ந் தேதி மரணம் அடைந்தார். இருவரது மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டு அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதானி விவகாரத்தால் மேல்சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடையுடன் அவைக்கு வந்தனர். இதே போல் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் முகத்தில் கருப்பு முகக்கவசம் அணிந்து இருந்தனர். அவை கூடியதும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அதானி குழும மோசடி குறித்து பாராளுமன்றம் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதே போல் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மோடி-அதானி போன்ற முழக்கங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியால் அவையை நடத்த முடியவில்லை. இதனால் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் 2 மணி வரை ஒத்திவைத்தார். பிற்பகல் அவை தொடங்கியபோதும் இரு அவைகளிலும் அமளி நீடித்தது. இதனால் இரு அவைகளும் புதன்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. மகாவீர் ஜெயந்தி என்பதால் பாராளுமன்றத்திற்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.