கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது!!
இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,824 ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,641 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 998 பேர், மகாராஷ்டிரத்தில் 562 பேர், குஜராத்தில் 301 பேர், டெல்லியில் 429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,800 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 75 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த எண்ணிக்கை நேற்றை விட இன்று 1,830 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 20,219 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரத்தில் 3 பேர், கேரளா, கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தானில் தலா ஒருவர் என 7 பேர் இறந்துள்ளனர். இது தவிர கேரளாவில் விடுபட்ட பலிகளில் 4-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,892 ஆக உயர்ந்துள்ளது.